Samstag, November 27, 2004

தமிழீழம் மலரட்டும்

நீண்ட பல்லாண்டுகளாய் நீறு பூத்திருந்த எங்கள்
கொண்டாட்ட நினைவுகளும் குதூகலக் கனவுகளும்
தூண்டிய மணிவிளக்காய் சுடர்விடும் இந்நாளில்
மலர்க தமிழீழம்-நம் மக்கள் மனம் நிறைய.

களத்தினில் இளைஞர்கள் களித்து விளையாடிட
மனைகளில் மாதர்கள் மகிழ்ந்து கொண்டாடிட
புத்தெழில் மங்கையர் நர்த்தனம் ஆடிட
புனிதப் போர் வீரர்கள் பொலிவுடன் போரிட
எத்திசை பார்க்கினும் சுதந்திரம் பீறிடும்
தனித் தமிழீழம் மலரட்டும் தரணியில்.

அந்நிய இராணுவக் காலடி அழிந்திடும்
எத்தர்கள் கூட்டத்தின் இருப்பிடம் தகர்ந்திடும்
காவல் தெய்வங்கள் கானகம் நீங்கிடும்
ஈனர் பாசறைகளில் இருள் வந்து சூழ்ந்திடும்
மக்கள் மனங்களில் மகிழ்ச்சியே பொங்கிடும்
மாட்சிமை கொண்ட தமிழீழம் மலரட்டும்.

கோடை காலத்துப் பாலை நிலங்களாய்ப்
பரிதவித்த நாம்
சுதந்திர மழைக்காய் விடுதலை வானை
அண்ணாந்து பார்த்தோம்
மலர்களுக்கும் மாஞ்சோலைகட்கும்
வசந்தங்கள் என்றும் மாறி மாறி வந்து போகும்.
மனிதர்கள் நாம் இழந்து விடும்
வசந்தங்களாம் மகத்தான எம் இளமைக் காலங்கள்
மீண்டும் வராமல் போயே போய் விடும்.

எங்கள் மண்ணின் மழலை மொட்டுக்கள்
விரியும் போதாவது வசந்தம் வரட்டும்
நம்பிக்கை ஒளியே வீசும் காலத்தில்
செந்தீப் பொறியாய் தமிழீழம் மலரட்டும்

காடுகள் வயல்கள் களனிகள் நிறையட்டும்
இரத்தச் சேறுகள் தாண்டியெம் வாழ்வு தொடரட்டும்
போரிடும் புலிகளெம் ஜெயத்தினைத் தேடட்டும்
மார்பினில் சுதந்தர மலர் வந்து வீழட்டும்
ஏனினித் துயரென எம்மக்கள் சிரிக்கட்டும்
பாரினில் சுதந்திர ஈழம் மலரட்டும்.

தீட்சண்யன்
18.2.90

Keine Kommentare: