Freitag, Mai 13, 2005

ஜயசிக்குறு யாழுவா

ரிவிரச வுடன் நீ திமிர்கொண்டு நின்றாய் -புலியின்
முதுகெலும்பு முறிந்ததென்று முகடதிரக் குரைத்தாய்!
சத்ஜெய உனக்குச் சறுக்கிப் போய் விட்டாலும்-வேங்கை
வேகம் குறைந்ததென்று வீறாப்புப் பேசினாய்!
எடிபல வில் நாங்கள் எட்ட விலகிநிற்க- தமிழன்
கொட்டம் அடங்கிற்றென கும்மாளக் குதிபோட்டாய்!

ஒன்றரை மாதத்தில் நாடெல்லாம் வேட்டொலிக்க
கண்டி வழிப் பாதையிலே கவசவாகனம் ஓட்டி
பரந்தன் சந்தியிலே படையோடு படைசேர்ந்து
கரங்கள் குலுக்கிப் படங்களுக்குப் போஸ் கொடுத்து
ஆனையிறவு ஊடாக அகலக்கால் வைத்து
யாழ்ப்பாதை திறப்பதாய் வாய்ப் பந்தல் போட்டு நின்றாய்.

ஜயசிக்குறு என்று பெயரிட்டுப் படைகுவித்து- இப்போ
பயசிக்குறு ஆகி பாதியிலே நிற்கிறாய்
ஓடிப்போன உங்கள் உசாரான தோழர்களைத்
தேடிப் பிடிப்பதே உனக்குப் பெரும்பாடாய் போச்சுமச்சான்
மாறிமாறி நீ தேதிகள் குறித்து விட்டு-இப்போ
வருடமொன்று முடிந்ததென்று வாடிப்போய் நிற்கிறாய்.

ரத்வத்தையும் ராட்சசியும் மெத்தைகளில் படுத்திருக்க-நீ
நுளம்போடும் நோயோடும் பற்றையிலே படுப்பது ஏன்?
தலைவர்களின் பந்தயத்தில் நீதானா பலிக்கடா?
முல்லைத்தீவுமுகாம் முற்றாக அழிந்த பின்னும்
செத்தவர்கள் பட்டியலை நீ பார்க்க முடிந்ததா?
உன்கதியும் அதுதானென அறியாயோ முட்டாளே!

யாழ்ப்பாதை திறக்க வந்த யாழுவா இப்போ நீ
இடைப்பாதை பலதிறந்து ஏங்கி முழிக்கின்றாய்-எமது
போர்ப்பாதை வேகத்தில் நின்தோழர் பலரிழந்தாய்!
தார்ப்பாதை காணாமலே டாங்கிகள் பலவிழந்தாய்!
புதுப்பாதை வழிவந்து பூசை நடத்த முதல்
நேர்ப்பாதை பிடித்து நீ ஊருக்கு மாறுமச்சான்!

தீட்சண்யன்

2 Kommentare:

வன்னியன் hat gesagt…

இன்று ஜெயசிக்குறு ஆரம்பிக்கப்பட்டதின் எட்டாண்டு நிறைவு. இது பற்றி என்பக்கத்திலும் ஒரு பதிவு எழுதியுள்ளேன். ஈழப்போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத பக்கமொன்று ஜெயசிக்குறுச் சமருக்கு உண்டு.

Chandravathanaa hat gesagt…

நன்றி வன்னியன்.
வாசித்தேன். நல்ல பதிவு.