Donnerstag, September 16, 2004

திலீபா!

நல்லூரின் வீதியிலே வந்து சிரித்தாய்
மேடையிலே போயமர்ந்து வீரம் விதைத்தாய்
பாடையிலே நீயிறங்கிப் போன கணத்திலே
வேடமிட்ட இந்தியரின் துகிலை உரிந்தாய்.

ஈழமக்கள் எங்களுக்காய் சிலுவை சுமந்தாய்
அடிவயிற்றில் தீ மூட்டி உடலம் எரித்தாய்
புதியதொரு போர் முனையில் நின்று எதிர்த்தாய்
நாவரண்டு உடல் சுருண்டு வேள்வி வளர்த்தாய்

நீ செயலிழந்து வருடங்கள் ஏழானதோ!
எம் நெஞ்சுகளில் உன்நினைவு வேரானதோ!
மரணம்தான் வாழ்க்கையின் முடிவு என்றாலும்
உன்மரணத்திலே வரலாறு ஜனனம் பெற்றதே!

உன் மூச்சு அன்று ஒரு புயலானது
உன் விழிகள் தீ மூட்டும் கனலானது
உலகமெல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்தது
எம் உள்ளங்களில் பூகம்பம் வாய் பிளந்தது.

நெஞ்சத்தில் குடியிருக்கும் தியாக நெருப்பே!
வஞ்சத்தை வெற்றி கொண்ட வானக மலரே!
உன் பாதை வழித்தடத்தில் செல்லுகிறோம் நாம்
வேங்கைக் கொடிநாட்டி வீரநடை போடுகிறோம் நாம்.

தீட்சண்யன்
15.4.94

Keine Kommentare: