Sonntag, Oktober 25, 2009

மாவீரன் துயிலும் இல்லம்

வெறுமே நிணமும் நீரும் கொண்ட ஒரு பிண்டமல்ல
வீரமும் விடுதலை வேகமும் கொண்டவன்
ஈகமும் மனதில் ஈழமும் கண்டவன்
தானைகள் தகர்த்தொரு தடவழி சமைத்தவன்
எங்கே போர்க்களம் எங்கே பகைவன்-என
வானமும் நடுங்கிட வையகம் நடந்தவன்
மார்பிலே குண்டேற்றி மரணத்தை அணைத்தவன்
உறங்கிடும் கதை சொல்லும் உண்மையின் தலமிது

கற்களும் முட்களும் காலடி நெருட
புற்களும் புழுதியும் பாதம் மறைக்க
கைகளில் சுடுபொறி கருத்துடன் ஏந்தி
விழிகளில் விடுதலைச் செம்பொறி தாங்கி
தலைவனின் காலடித் தடமது தொடர்ந்து - தன்
விழுப்புண் வாங்கிய திண்ணுடல் நோக
காகமும் கழுகும் உண்டிடவென்று
எதிரியைக் கிழித்தவன் உறங்கிடும் பூமி

மக்கள் வாழ
மக்கள் வாழும் மண்ணது மீள
கற்கை மறந்தவன்
தாயின் தழுவல்
பொற்கை மறந்தவன்
சொந்த வீட்டுப்
படுக்கை மறந்தவன்
புதுத்
தளிர்க்கை மறந்தவன்
பந்த பாசம் எல்லாம் ஒன்றாய்
வெந்து மாளும்
வேட்கை நிறைந்தவன்

மண்ணிலே தவழ்ந்து
மண்ணிலே நடந்து
மண்ணையே குருதியால் நனைத்து
மண்ணுக்காய் உரமாகி
கண்ணொத்த விடுதலைக்காய்
விண்ணையே அளந்தவன்
விழி மூடும் தலமிது

மாண்டவர்க்கு மனங்கலங்கி
மண்ணிட்ட சமாதியல்ல
வாழ்பவர்கள் சென்று நிதம்
வழிபடுமோர் சந்நிதி
வீழ்ந்தவர்கள் கதை முடிக்கும்
விடுகதையின் முடிவல்ல
சேர்ந்து நிதம் களம் புகுவோர்
வழிபடுமோர் பொன்னடி

மாவீரர் பாதங்களை அடி தொழுவோம் நாங்கள்
ஈகச் சுடரதனில் வழிதெளிவோம் நாங்கள்
மானம் பெரியதெனும் படையணியில் செல்வோம்
ஈனம் எதனையுமே இடர் கண்டு ஏற்கோம்
தானம் தவமிரண்டும் போரினிலே காப்போம்
வானம் திரண்டிடினும் வந்த வழி மீளோம்
ஈழம் எமதெனவே இரு கண்ணில் ஏற்போம்
தலைவர் வழி காட்டும் திசை நோக்கிச் செல்வோம்

-தீட்சண்யன்

பிரசுரம் - எரிமலை-47 (மார்ச் 1994)

Keine Kommentare: