Dienstag, Mai 01, 2007

ஒன்று படு தொழிலாளர் வர்க்கமே

வென்றிடுவோம் தமிழீழம் விரைவிலே

திங்கள் முகம் சிரிக்க தென்றல் தவழ்ந்து வர
மஞ்சள் முகந் திருத்தி மங்கையர்கள் வழியனுப்ப
அந்திக் கடற்கரையின் மண்ணில் தடம் பதித்து
ஆண்மைத் திண்தோளார் ஆழிப் படகேறி
நுரைசேர் அலைகளின் மேல் எகிறி விழுந்தோடி
கரைசேர் நாள்வரைக்கும் காதில் ஒலிக்கும்வகை
குரல் சேர் கூச்சலுடன் எம்பிக் கையசைக்கும்
காட்சி தனை இனி நாம் காண வெகு தூரமில்லை.

பல்லாயிரம் தொழில்கள் செழித்திருந்த தேசமதில்
வல்லாதிக்க வெறி வாலாட்டத் தொடங்கியதால்
முள்ளால் நிறைந்த வெறும் தரிசாகிப் போச்சு நிலம்
அல்லாடிப் போய் நாங்கள் அலுக்குலைந்து போய் விட்டோம்
தொழில்கள் சிதைந்ததனால் தோள்கள் துவண்டிட்டோம்.
இவையெல்லாம் நிலைமாறும் நேரம் இனி வருகுதையா
அவை யெல்லாம், உலகத்துப் பேராளர் பேச்சரங்க அவை எல்லாம்
ஈழத்துப் போர்முரசின் அதிர்வோசை ஒலிக்குதய்யா.

தேசத்தின் உடன்தேவை ஏதென நீ புரிந்து
நாசம் தவிர்ப்பதற்காய் நாட்டமுடன் களமிறங்கி,
உழைப்பால் ஒன்றுபட்டு உதிரத்தால் வழிசமைத்து - எம்
வெற்றித்தேர் முன்நகர உந்துவிசை ஆகி நின்றால்
ஜயசிக்குறுக் களெல்லாம் சுக்கு நூறாகிவிட
எதிரிக்கு பயசிக்குறு வந்து பாய்ந்தோடிப் போய் விடுவான்
எமக்கே ஜயசிக்குறு வாகி எம்தேசம் நிமிர்ந்தெழுந்து
தமிழீழம் இதுவென்றே புலிக்கொடியோடு உறுமி நிற்கும்.

கருத்தொருமித்து மனம் கடனே எம்பணியென்று
விருத்தெரியா விடலையெல்லாம் வீரமுடன் அணிசேர்ந்து
பொருள் தெளிந்து போரின் கலை பயின்று
விருப்புடனே விடுதலைக்காய் கறுப்பு உடைதரித்து
காரிருளோ கடலோ கானகமோ ஏதென்றால் எமக்கென்ன
கிழித்தெறிவோம் எம்முடலை தகர்த்தழிப்போம் தருக்கர்களை
என வரித்து
தேசத்தின் விடியலுக்காய்,
தேசத்து நாயகனின் சுடரொளிக் கண்ணசைவில் பொருது நிற்க
நாமெல்லாம் இழை பிரிந்து ஈனர்களாய் நிற்பதுவோ!?

இலட்சியத்து வேள்விக்காய் ஒன்று பட்டு நாமுழைப்போம்
கலைத்துவமோ களப்பணியோ கனகடின உடலுழைப்போ
கடலோ வயலோ கானகமோ தெருவோ வாய்க்காலோ
கணக்கோ, வேறெந்தக் கணணித் தொழிற்துறையோ
மருத்துவமோ மாந்தர்க்கு உதவும் மனுப்பணியோ
எத்துறைசார் ஏந்தல்களும் தோளோடு தோளிணைந்து
தொழிலாளர் வர்க்கமென்ற குடையின் கீழ்
மனமிணைந்து தொடர்ந்தாலே
தமிழீழ வெற்றி வரும் வெகு விரைவில்.

ஒன்றுமே குறை கூற ஒவ்வாத தலைவன் உள்ளான்
தமிழ்ப் பெண்டிரும் களமிறங்கிப் போராடும் நிலை கொணர்ந்தான
வையமே வியந்திடும் கரும்புலிப்படை வகுத்தான்
எவ்வணியும் பெற்றிரா நெறியாள்கை எமக்குண்டு
இதுவரை கண்டிரா விறல்வீரம் இங்குண்டு
இத் தலைவன் காலமதே எம்மவர்க்கு விடியல் தரும்
இப்பொற் தலைவன் வழியிலெங்கள் புனிதமண் மீண்டுவரும்.

முழுவளமும் முனைப்புடனே முப்புலமும் பயன்படுத்தி
வழுவா வழிப்பாதையில் அணிவகுத்து நின்றே நாம்
பொருதாத் திசையென்று ஏதொன்றும் வைக்காமல்
முழுதாய் முற்றிலுமாய் முழுமூச்சாய் முகடதிர
உழுவோம் உழைத்திடுவோம் போருக்கு உரமேற்றி
தொழிலாளத் தோழர்கள் நாம் திரள்வோம்
தீயெனவே தடைகளெலாம் களைவோம்
எதிரி தன் சிரமேற் கைகூப்பி தொழுதோடுவான்
பிறகென்ன மலர்வோம் நாம் ஈழமென!

தீட்சண்யன்
1.05.98

ஒலிபரப்பு - புலிகளின்குரல் வானொலி - 1.05.98
வாசித்தவர் - கனிமொழி

Keine Kommentare: